ரோம்

எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கேரள பாதிரியார்  டாம் உழுன்னலில் தன்னை அவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாக கூறி உள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னலில்.  இவர் ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் தொண்டாற்றி வந்தார்.  அந்த இல்லம் அன்னை தெரசாவின் மிஷினரியால் நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.   கடந்த வாரம் அவரை விடுதலை செய்துள்ளனர்.  விடுதலை ஆன பாதிரியார் நேற்று ரோம் நகரில் பத்திரிகையாளர்கள சந்தித்தார்

அந்த சந்திப்பில் தெரிவித்ததாவது :

“என்னை தீவிரவாதிகள் நன்கு கவனித்துக் கொண்டனர்.  எனக்கு சில முறை ஜுரம் வந்தபோதும்,  வயிறு சரியில்லாத போதும் தேவையான மருந்துகளை அளித்தனர்.  அது தவிர எனது சர்க்கரை நோய்க்கு முதலில் இன்சுலின் ஊசி போடப்பட்டது.  பிறகு இன்சுலின் கிடைக்காத காரணத்தால் மாத்திரைகள் தரப்பட்டது.

என்னை முழு சுதந்திரத்துடன் வைத்திருந்தனர்.  என்னால் நினைத்த நேரத்தில் தூங்கவும்,  நான் நினைத்ததெல்லாம் செய்யவும் அனுமதித்திருந்தனர்.   சிறு சிறு உடற்பயிற்சியை என்னை அடைத்து வைத்த அறையின் உள்ளேயே செய்யச் சொன்னார்கள்.   எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு முறை மருத்துவரை அழைத்து முழுப் பரிசோதனை செய்தார்கள்.

என்னை ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் பல இடங்களில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்றனர்.   அந்த பயணத்தின் போது என் கண்கள் கட்டப்பட்டிருந்தன.   அங்கு நடைபெற்ற இரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நான் கலந்துக் கொண்டேன்.   நான் எப்பொழுது நினைத்தாலும் அவர்கள் இல்லாத நேரத்தில் கடவுளை தொழ அனுமதித்திருந்தனர்.   ரொட்டியும் ஒயினும் கடவுளுக்கு படைத்து விட்டு எடுத்துக் கொள்வது என் வழக்கம்.   அது மட்டும்தான் எனக்கு கிடைக்கவில்லை.

என் விடுதலைக்காக பாடுபட இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  மற்றும் பல நாட்டு தலைவர்களும் மக்களும் என் விடுதலையை எதிர்பார்த்தனர்.   அவர்களுக்கு எவ்வாறு என் நன்றிக்கடனை செலுத்தப் போகிறேன் என்பது தெரியவில்லை” எனக் கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வரும் செவ்வாய் இரவு பாதிரியார் இந்தியாவுக்கு திரும்புவார் என அறிவித்துள்ளது.