அமைச்சர் காமராஜை கைது செய்து பதவியில் இருந்து நீக்க வேண்டும்! ராமதாஸ்

சென்னை,

மோசடி புகாருக்கு ஆளாகி, சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளான  அமைச்சர் காமராஜை உடனே  அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்ற ஒப்பந்ததாரர் ஒரு வீட்டை காலி செய்து தருவதற்காக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான காமராஜை அணுகி ரூ.30 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒப்புக்கொண்டவாறு குமாருக்கு வீட்டை காலி செய்து தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. ஒரு கட்டத்தில் தமது பணத்தை திருப்பிக் கேட்டபோது குமாருக்கு அமைச்சர் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ் மீது காவல்துறையில் குமார் புகார் அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு ஆணையிடக்கோரி, குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.

அதன் மீது தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவ்வழக்கை மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

‘அமைச்சர்களாக இருப்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மதித்து நடக்க வேண்டும். அமைச்சர் காமராஜ் மீதான குற்றச்சாற்றுக்கு முதற்கட்ட ஆதாரம் இருப்பதால் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் ஆணையிட்டிருக்கிறது. அமைச்சர் ஒருவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு மீண்டும், மீண்டும் ஆணையிடுவது தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழுக்கு ஆகும்.

அமைச்சர் காமராஜ் மீதான குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இருப்பதாக கோர்ட்டு கூறியிருக்கிறது. காமராஜ் மீதான குற்றச்சாற்றை தமிழக அரசும் மறுக்கவில்லை. மாறாக, காமராஜ் நேரடியாக பணம் வாங்கவில்லை. அவரது முன்னிலையில் அவருடன் இருந்த இன்னொருவர் தான் பணம் வாங்கியதாக கோர்ட்டில் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அமைச்சராக இருப்பவர்கள் கையூட்டு வாங்குவதே தவறு; அதுவும் சட்டவிரோத செயலை செய்வதற்கு கையூட்டு வாங்குவது மிகப்பெரிய தவறு ஆகும்.

இத்தகைய தவறு செய்த அமைச்சர் மீது கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதும், அவரை அமைச்சரவையில் அனைத்து மரியாதைகளுடனும் வைத்து அழகுபார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாத ஜனநாயகப் படுகொலையும், அற மீறலும் ஆகும்.

காமராஜர் காலத்தில் நேர்மையாளர்களும், அறிவார்ந்தவர்களும் மட்டுமே வீற்றிருந்த அமைச்சரவையில் இப்போது மோசடி செய்தவர்களும், ஊழல் செய்தவர்களும் மட்டும் தான் வீற்றிருக்கின்றனர். இந்த நிலையை அடியோடு மாற்ற முடியாது என்றாலும், இழந்த மாண்பை ஓரளவாவது மீட்பதற்கு வசதியாக, மோசடி புகாருக்கு ஆளான அமைச்சர் காமராஜ் மீது உடனடியாக மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அமைச்சரவையிலிருந்தும் நீக்குவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில்  கூறியுள்ளார்