நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்பு நிதி வசூலிப்பதாக ஏமாற்றும் மோசடி கும்பல்

பாரிஸ்

பிரான்ஸ் நகரில் தீவிபத்துக்குள்ளான நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்புக்கு நிதி கோரி சிலர் மோசடி செய்து வருவதாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை மாலை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரெ டாம் தேவாலயம் கடும் தீவிபத்துக்கு உள்ளானது. இதில் தேவாலயத்தின் மேற்கூரை, கோபுரம் உள்ளிட்ட அனைத்தும் இடிந்து விழுந்துள்ளது. தற்போது தேவாலயத்தின் கட்டிட சுவர் மட்டுமே எஞ்சி உள்ளது. இதை சீரமைக்க 100 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஒட்டி கத்தோலிக்கர் தலைவர் போப் ஆண்டவர் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். உலகின் பல செல்வந்தர்கள் இந்த தேவாலய சீரமைப்புக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அத்துடன் ஆன்லைன் மூலம் பலர் இந்த தேவாலய சீரமைப்புக்கு நிதி திரட்டி வருகின்றனர். இந்த ஆன்லைன் மூலம் நிதி திரட்டுபவர்களில் ஒரு சில மோசடி பேர்வழிகளும் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரான்ஸ் நாட்டின் சைபர் கிரைம் ஆய்வாளர் ஆலன் பிரில், “ஒரு சோக நிகழ்வு நடந்தால் அதற்கு உலகெங்கும் உள்ள மக்கள் நிவாரண நிதி அளிப்பது சகஜமான ஒன்றாகும். இதை பயன்படுத்தி ஒரு சிலர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதைப்போல் நோட்ரெ டாம் தேவாலயத்தில் தீவிபத்தை ஒட்டி ஒரு சிலர் உதவி கோரி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மோசடி பேர்வழிகள் தாங்கள் நொட்ரெ டாம் தேவாலய சீரமைப்புக்கு தங்கள் நண்பர்களுடன் இணைந்து உதவ முன் வந்துள்ளதாகவும் அதில் மக்களின் பங்களிப்பையும் தாங்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர். உலகெங்கும் தற்போது அந்த தேவாலய புகைப்படம் மற்றும் தீவிபத்து வீடியோக்கள் கிடைக்கின்றன. அதை அவர்கள் தங்கள் கோரிக்கைகளுடன் பதிகின்றனர்.

இதைப் போல் உண்மையாக நிதி கோரும் பல இணைய தளங்களும் உள்ளன. அந்த தளங்களில் பலர் பின்னூட்டம் இடுகின்றனர். அந்த பின்னூட்டங்களை இந்த மோசடி கும்பல் காப்பி செய்து தங்கள் இணைய தளங்களில் பதிந்து விடுகின்றனர். இதை பார்ப்பவர்களுக்கு இந்த தளங்கள் மக்கள் ஆதரவு பெற்றது என நம்பி நிதி அளித்து ஏமாந்து விடுகின்றனர்.

மக்கள் இந்த விவகாரத்தில் ஏமாறக் கூடாதுஎன்னும் நல்லெண்ணம் காரணமாக நான் இதை தெரிவிக்கிறேன். ஒரு நல்ல சேவைக்கு செல்ல வேண்டிய நிதியை இடையில் யாரும் ஏமாற்றி பறிக்கக் கூடாது என்பதற்காக இந்த விவரங்களை தெரிவித்துள்ளேன்.  மற்றபடி தேவாலய சீரமைப்புக்கு நிதி அளிக்க வேண்டாமென நான் ஒரு போதும் கூற மாட்டேன். அதை சாக்கிட்டு ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என நான் எச்சரித்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.