நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான பள்ளிக் கல்வி – அசத்தும் காங்கிரஸ்?

புதுடெல்லி: நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான தொடக்கக் கல்வி என்ற உறுதிமொழியை, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரே தரத்திலான தொடக்கக் கல்வி என்பது சேர்க்கப்பட்டுள்ளது.

கல்வி என்பது ஒரு பொதுப் பயன்பாட்டுப் பொருள். நாட்டினுடைய பொதுப் பள்ளிகளில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி தரப்படும். இதற்கு எந்த வடிவிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.

மேலும், 10ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகளில், நூலகம், ஆய்வகம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படுவதோடு, விளையாட்டு மைதானமும் கட்டாயமாக்கப்படும்.

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வரும் ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6% கல்விக்காக செலவிடப்படும்.

கல்விக் கடன் பெற்ற மாணவர், வருவாய் ஈட்டத் தொடங்கும் வரை, அந்தக் கடனுக்கு வட்டிக் கி‍டையாது என்பதாக, பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி