கொரோனா தொற்றுக்கு இலவச தடுப்பூசியை அறிவித்த 6 நாடுகள்…!

டெல்லி: உலக நாடுகளில் அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை 6 நாடுகள் இலவசமாக வழங்குகின்றன.

உலகின் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ள கொரோனா தொற்றால் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஜான் ஹாப்ஸ்கின் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் உலகளவில் 1.5 மில்லியன் பேரை பலி கொண்டிருக்கிறது.

இந்த கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் பல நாடுகள் தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு அளிக்க தயாராகி வருகின்றன. அதில் குறிப்பாக ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே, இந்தியா ஆகிய நாடுகள் இந்த கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குகின்றன.

ஜப்பான் நாட்டில் இது தொடர்பான மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அந்நாட்டில் உள்ள 126 மில்லியன் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவோர்.

பிரான்ஸ் பிரதமர் ஜின் காஸ்டெக்ஸ், இன்னும் ஒரு வாரம் தான் என்றும், பின்னர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்றார். மொத்தம் 3 கட்டங்களாக இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர்  கூறி உள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டு மக்கள் அனைவருக்கும்  இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வேன் என்று பிடன் பிரச்சாரத்தில் உறுதியளித்திருந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான தமது திட்டம் ஒன்றை அவர் முன்வைத்தார்.

பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசி, காப்பீடு செய்தாலும் செய்யாவிட்டாலும் அனைவருக்கும் இலவசம் என்று ஜோ பிடன் கூறி இருந்தார். நார்வே நாடானது, தமது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக கடந்த அக்டோபரில் அறிவித்தது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்து உள்ளது.

இந்த நாடுகளை போன்று கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியாவும் அறிவித்து உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று கூறினார். தமிழகம், மத்திய பிரதேசம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் மாநில மக்களுக்கு கொரேனா தடுப்பூசியை இலவசமாக தருவதாக தெரிவித்துள்ளது.