திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில் தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் கோவில் அர்ச்சர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், பக்தர்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகளின் வழிக்காட்டுதலின் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சிறப்பு தரிசனம் டிக்கெட் மற்றும் விஜிபிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், கடந்த 9 நாட்களில் திருப்பதியில் 1லட்சத்து 57ஆயிரத்து 966 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், அதில் 50,791 பேர் தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.