சென்னை:
இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகை அல்லது, அது அவர்களின் உரிமை என்றும், மத்திய மாநில அரசுகளை எதிர்த்து, மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்ட வரைவு சட்டத்திருத்தத்தில்  இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடியும், பிரதமருக்கு, இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில்,  மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சார பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து, வரும் 26ம் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதை நிறைவேற்றுவதற்காக நிதியமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழக அரசின் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
அதன்படி பயன்படுத்துகிற இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சாரவாரியம் கட்டாயம் வசூலிக்கவேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்திக்கொள்ளலாம்.
எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக்கூடாது என்பதே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தமிழகத்தில் 24 லட்சம் பம்ப் செட்டுகளுக்கும், 11 லட்சம் குடிசைகளுக்கும், 2.1 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு வழங்கப்படுகிற கட்டணச் சலுகையும், 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிற இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை மத்திய அரசு செய்துவருகிறது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிறகுதான் நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு எந்த வகையிலும் மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை தடுக்கமுடியாது என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் என்பது விவசாயிகளின் துன்பத்தை போக்குவதற்காக 1990 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டதாகும். காவிரி டெல்டா விவசாயிகள் நீர்ப்பாசனத்தை நீண்ட நெடுங்காலமாக இலவசமாக பெற்றுவருகிறார்கள்.
ஆனால் ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் மிகுந்த பொருட்செலவில் முதலில் கிணறுவெட்டி, பம்ப் செட் அமைத்து, மின்சார இணைப்பு பெற்று, பயன்படுத்துகிற மின்சாரத்திற்கு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்துவது விவசாயிகளிடையே சமநிலைத் தன்மை இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.
விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வந்த இந்த அநீதியை கலைவதற்கே கொண்டுவரப்பட்டது தான் இலவச மின்சாரம். அந்த வகையில் இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது விவசாயி களின் உரிமை. அதை பறிப்பதை விவசாயிகள் தங்களது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடி, தடுத்து நிறுத்துவார்கள்.
இதற்காக கடந்த காலத்தில் பல போராட்டங்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தி, பல உயிர்களை தியாகம் செய்திருக்கிறோம். விவசாயிகளின் பிணத்தின்மீது நடந்துசென்று தான் மோடி அரசால் இந்த சட்டத்தை அமுல்ப்படுத்த முடியுமே தவிர வேறுவகையில் முடியாது. தமிழக காங்கிரஸ் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கும்.
தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், குடிசை வாசிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள், நகரங்கள், பேரூர்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பாக 5 பேருக்கு மிகாமல் கையில் கறுப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வருகிற மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.