சென்னை:
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 3வது கட்டமாக மே 17ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுஉள்ளது.  இதற்கிடையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக   தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் உணவு இலவசமாக 3 வேளை உணவு  வழங்கப்பட்டு வந்தது.
இன்றுமுதல் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணியாளர்கள் உள்பட பல தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, அம்மா உணவகங்களில் இன்று முதல் பணம் கொடுத்து சாப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்  இன்னும் பெரும்பாலான தொழில்கள் தொடங்கப்படாத நிலையில், ஏழை மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியுடன் தான் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 17 ஆம் தேதி வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.