ஆடம்பர ரெயில்களில் ஓசி பயணம்…ரெயில்வே துறைக்கு நாடாளுமன்ற குழு கண்டனம்

டில்லி:

ஆடம்பர ரெயில்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நாடாளுமன்ற நிலை குழு தனது கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற நிலை குழு சமீபத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. எம்.பி. சுதீப் பந்தோபாத்தாய் தலைமையிலான இந்த குழு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில், ‘‘ரெயில்வே வாரியம் அல்லது இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அல்லது மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் ஆடம்பர ரெயில்களில் இலவச முறையில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அவர்கள் பயணம் செய்த 5 ஆடம்பர ரெயில்களில் கட்டணம் என்பது சுமார் ரூ.31,637.50ல் முதல் 41,128.75 ஆக உள்ளது. இதில் பெருமளவில் ரெயில்வே அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயில்களில் 30 சதவீதம் அளவிற்கே பயணிகள் வருகை உள்ளது. இதனால் இந்த ரெயில்கள் நஷ்டத்தினை ஈடு கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘மகாராஜா எக்ஸ்பிரெஸ், கோல்டன் சாரியட், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், டெக்கான் ஒடிசி மற்றும் பேலஸ் ஆன் வீல்ஸ் போன்ற 5 ஆடம்பர ரெயில்களை இயக்கி வருகிறது. 2012-&13ம் ஆண்டில் மகாராஜா எக்ஸ்பிரெசில் 30 பேரும், 2013-&14ம் ஆண்டில் 97 பேரும், 2014&-15ம் ஆண்டில் 53 பேரும் மற்றும் 2015-&16ம் ஆண்டில் 73 பேரும் கட்டணம் இன்றி இலவச முறையில் பயணித்துள்ளனர்.

இதேபோல் பேலஸ் ஆன் வீல்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் போன்ற ரெயில்களில் ரெயில்வே அமைச்சரின் முன்னாள் தனி செயலாளர் மற்றும் முன்னாள் சிறப்பு பணி அதிகாரி மற்றும் மண்டல ரெயில்வே நிர்வாகத்தின் பல்வேறு பிரிவு மேலாளர்களும் உள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் ரெயில்வேயில் இதுபோன்ற இலவச பயணம் மேற்கொள்வதற்கு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.