மேற்கு வங்கத்தில் குடி புகுந்த அகதிகளுக்கு இலவச நிலம் : மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாகக் குடி புகுந்த மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) என்னும் செயல்முறையை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள்  இருப்பதால் அவர்களை அக்கட்சி பாதுகாக்கிறது என பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று கொல்கத்தாவில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ”மேற்கு வங்க மாநில அரசு நிலத்தில் இருந்த 94 அகதிகள் குடியிருப்புக்களை முதலில் முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நில உரிமைகளும் வழங்கப்படும்.

அகதிகள் தங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் மத்திய அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அமைந்துள்ளன. ஆகவே இவற்றை சட்ட பூர்வ நடவடிக்கைகள் மூலம் அம்மக்களுக்குச் சொந்தமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற உள்ளன.

அகதிகள் குடியிருப்புக்களை முறைப்படுத்தவும், அவர்களுக்கு நில உரிமை வழங்க வேண்டும் எனவும் நீண்ட காலமாக மத்திய அரசை இதற்கான ஒப்புதலைக் கேட்டுக்கொண்டு வருகிறோம். ஆனால் மத்திய அரசு அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

You may have missed