மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை:

துரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன். இங்கு தினசரி 20ஆயிரம் முதல் 30ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசிப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தீபாவளி முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம்  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இடையில் சில இடர்பாடுகள் ஏற்பட்ட நிலையில், இலவச லட்டு வழங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு, இன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்படி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்படும். அம்மன் சன்னதியில் இருந்து வெளியே வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி முன்பு லட்டு வழங்கப்பட உள்ளது.

லட்டு தயாரிப்பதற்காக மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் தனி அறை அமைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையைப் பொறுத்து தினமும் 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 15 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலையில் கோவில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

கார்ட்டூன் கேலரி