இலவச ரேசன் அரிசி ஏழைகளுக்கு மட்டுமே…! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:

றுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு மட்டுமே ரேஷனில்  இலவசஅரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன என்றும்,  ரேஷன் அரிசி கடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் கடுமையாக தனது  கருத்தை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, வெளி மாநிலங்களுக்கு கடத்தப் பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏராளமானோர் மீது கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலூர் சேர்ந்த அமர்நாத் என்பவர் வெளி மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீதான வழக்கு ரத்துச் செய்யக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, ரேசன் அரிசி தொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலவச ரேசன் அரிசி திட்டத்தைப் பொருத்தவரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் பதில் மீது ஆய்வு செய்த நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு  வலியுறுத்தினர்.

நாட்டில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேசன் அரிசி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. ‘பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இலவச அரிசியை பெற்று வருகிறார்கள்.  தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன என்று கடுமையாக சாடிய நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்தனர்.