சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி:  புதுச்சேரி ஆளுநர் உத்தரவு – முதல்வர் எதிர்ப்பு

புதுச்சேரி::

புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்குத் தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர்  கிரண்பேடி அறிவித்துள்ளதற்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி பொறுப்பேற்றதில் பல அதிரடி அறிவிப்புகளை செய்து வருகிறார்.  இந்நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் தற்போது புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளார் கிரண் பேடி.

கிராமங்களில் தூய்மைப்பணியை வலியுறுத்தும் வகையில் சுத்தமான கிராமங்களுக்குத்தான் இலவச அரிசி அளிக்கப்படும் என கிரண் பேடி தெரிவித்துள்ளார். சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ்பெறாத கிராமங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

தூய்மைப் பணிகள் முடிவடைந்து சான்றிதழ் பெறும் வரை அந்த கிராமத்திற்கான இலவச அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக அளிக்கப்படும் என்கிறார் கிரண் பேடி.

இதற்கு முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“புதுச்சேரியில் பெரும்பாலான கிராமங்கள் சுத்தமாக உள்ளன. மிகச்சில கிராமங்களில்தான் பிரச்சினை இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநர் கிரண்பேடி நினைக்கிறார். வட மாநிலங்கள் பலவற்றில்தான் சுத்தமான கிராமங்களே இல்லை. ஆனால் தேவையின்றி இங்கு பிரச்சினை செய்கிறார் கிரண்பேடி” என்று முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி