பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் சென்று சேராத காரணத்தால், வெறும் காலுடன் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான இலவச பொருட்களை தமிழக அரசின் கல்வித்துறை வழங்கி வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 97 தொடக்கப்பள்ளி, 30 நடுநிலைப்பள்ளி, 23 அரசு உயர்நிலைப்பள்ளி, 15 அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, 19 அரசு மேல்நிலைப்பள்ளி, 8 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 14 வகையான பல்வேறு இலவச பொருட்களை அறிவித்தார்.

இதில் நோட்டுக்கள், புத்தகங்கள், லேப்டாப், ஸ்கூல் பேக், சீருடை, மதிய உணவு, காலணி, பஸ்பாஸ், சைக்கிள், கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி, அட்லஸ் வரைபடம், பள்ளிசெல்லா குழந்தைகளுக்கான கல்வித்தொகை, தாய் தந்தையற்ற, வருமான இல்லாத மாணவர்களுக்கான திட்ட தொகை அடங்கும். ஆனால் இந்தாண்டு இதுவரை நோட்டுக்கள், புத்தகங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன. காலணி, கலர் பென்சில், அட்லஸ், பள்ளி உடைகள் உள்ளிட்ட பொருட்கள் இதுவரை எந்த பள்ளிகளிலும் வழங்கவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணி, அட்லஸ் மேப், உடைகள், கலர்பென்சில் உள்ளிட்ட பொருட்கள் இன்னும் வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் காலணி இல்லாமல் வெறும்காலில் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காலில் செருப்பு இல்லாமல் சாலையில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.