1 கோடி குடும்பங்களுக்கு ‘இலவச ஸ்மார்ட் போன்’: ராஜஸ்தான் மாநில பாஜ அரசு அறிவிப்பு
ஜெய்ப்பூர்:
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இண்டர்நெட் வசதியுடன் இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என மாநில பாஜ அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா இருக்கிறார். அவரது தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய இருப்பதால், விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை வசுந்தரராஜே தலைமை யிலான ஆட்சி அமையாது என்றும் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலரும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 163 இடங்களை பெற்று வெற்றிபெற்ற மாநில பாரதியஜனதா வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 57 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கலக்கமடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியில் அமர அதிரடி சலுகைகளை அறிவிக்க முன் வந்துள்ளது.
அதன்படி, மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பங்களுக்கும் இண்டர்நெட் வசதியுடன் இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வரும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மாநில பாஜ அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.