தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

சென்ன‍ை: தமிழ்நாட்டில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், இலவச கொரோனா தடுப்பூசி வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் மே மாதம் 1ம் தேதி முதல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், அந்த தடுப்பூசியை இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, அந்த வயது வரம்பைச் சேர்ந்த அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில், மே மாதம் 1ம் தேதி முதல், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழ்நாட்டில், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.