ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி தொடக்கம்

​​
இந்திய ரயில்வே 700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச WiFi வசதியை ஏற்படுத்தியுள்ளது. மாதந்தோறும் 8 மில்லியன் மக்கள் WiFi வசதியை பயன்படுத்துகின்றனர். இத்தகைய தொழில்நுட்பம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயின் தொலைதொடர்பு கழகமான ரெயில்டெல் WiFi இணைப்பை செயல்படுத்தி வருகிறது.
railway station
இலவச WiFi வசதி மூலம் 30 நிமிடங்கள் இலவசமாக இன்டர்னெட் சேவையை பெறமுடியும் எனவும், ஒருவர் சராசரியாக 350 எம்பி வரை தரவுகளை பெறலாம் என்றும் இந்த மாத தொடக்கத்தில் கூகுள் கூறியுள்ளது. இலவச WiFi மூலம் மாதம் 7000 TB தரவுகள் பயனாளிகளுக்கு அளிக்கப்படுவதாக ரெயில்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையானது தற்போது 407 நகர்ப்புற ரயில் நிலையங்களிலும், 298 கிராமப்புற ரயில் நிலையங்களிலும், இந்தியா முழுவதும் 27 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத்,கோவா, ஹர்யானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, ஜார்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, நாக்லாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்ராகண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இலவச WiFi சேவை வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சேவை முதன் முதலாக மும்பை ரயில் நிலையத்தில் 2016ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. 6000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச WiFi வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.