புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மொத்தம் 11,000 இலவச Wi-Fi மையங்களை அமைத்து, அதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் கணினி பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் மாதம் 15GB டேட்டாவை இலவசமாக பயன்படுத்தும் திட்டத்திற்கு டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த டேட்டா பயன்பாட்டை ஒவ்வொரு பயனரும் 200 mbps வேகத்தில் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. ஆனால், பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டும் அந்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால், அடுத்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் நடைமுறையாக்கம் வேகம் பிடித்துள்ளது.

டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த திட்டம், அடுத்த 4 மாதங்களில் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். மேலும், அரசு – தனியார் ஒத்துழைப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.