டில்லி,

நாடு முழுவதும் ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 72 பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பினாமி சொத்துக்களை,  மத்திய வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக பினாமி சொத்துக்களை ஒழிக்க மத்திய அரசு  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து பினாமி சொத்துகள் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, பினாமி சொத்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் கோடிக்கணக்கான மதிப்புடைய பினாமி சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.1,833 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டபடி, குஜராத்  ஆமதாபாத் மண்டலத்தில் 136 பினாமி சொத்துக்களும்,  போபாலில் 93 சொத்துக்களும்,, கர்நாடகா மற்றும் கோவாவில் 76 சொத்துக்களும், , சென்னையில் 72 சொத்துக்கள்  என மொத்தம் 541 சொத்துக்கள்  முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பினாமி சொத்துக்கள்  தொடர்பாக 517 நோட்டீசுகளும் அனுப்பப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து விசாரணை தொடரும் என்றும் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பினாமி சொத்துகள் குறித்த ஏராளமான தகவல்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளதாகவும், அதுகுறித்து ஆராய்ந்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.