” ரபேல் விமான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மேற்கொள்ள இந்தியா கோரிக்கை விடுத்தது ”- பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

இந்தியா ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அனில் அம்பானியிடம் ரபேல் விமான ஒப்பந்தம் மேற்கொள்ள கோரிக்கை விடுத்ததாக பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

rafale

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சை தற்போது இந்தியாவில் தலைத்தூக்கி உள்ளது. ரபேல் ரக போர் விமான தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் ஈடுபட்டது எவ்வாறு என பிரான்ஸ் அரசின் தொலைக்காட்சி சந்தேகம் கிளப்பியிருந்தது.

ராணுவ தளவாடத் துறையில் 75 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, இந்திய பொதுத்துறை நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் பிரான்ஸ் அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய விமானப் படைக்கு பிரான்சு நிறுவனத்திடமிருந்து, 32 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் அந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. முன்பு ஒரு விமானம் ரூ.526 கோடி என்ற விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் பாஜக தலைமையிலான அரசு ரூ. 1,670 கோடி கொடுத்து வாங்குவதென்று முடிவு செய்தது.

மேலும், ரபேல் போர் விமான பாகங்களை தயாரித்து அளிக்கும் ஒப்பந்தம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடைவதற்கு சாதகமாக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதுடன், இதன்மூலம் ரிலையன்ஸ் மட்டுமன்றி பாஜகவினர் பல ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்னுக்கு வந்தது.

இதையடுத்து அதிக விலை கொடுத்து, ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முறைகேடுகள் நடக்கவில்லை எனில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு மூலம் விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் எந்த விதமான முறைகேடும் இல்லை என்று மோடி அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் இடம் பெற்றது குறித்து பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் சந்தேகங்களைக் கிளப்பியுள்ள. குறிப்பாக பிரான்சு அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தியா தான் ரபேல் போர் விமான ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் அரசின் முன்னாள் ஜனாதிபதி ஃப்ரான்கோயிஸ் ஹோலந்தி கூறுகையில், “ அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போர் விமான ஒப்பந்தம் போட இந்தியா கோரியிருந்தது. அதன் பிறகே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது “

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இந்திய ராணுவத் துறையின் ரூ.800.7 கோடி டாலர் மதிப்பிலான திட்டங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு முதலீடு செய்கின்றன. மறுபுறம் இந்திய அரசு, தனது சொந்த நிறுவனமும் – ராணுவ தளவாட உற்பத்தியில் 75 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிறுவனமுமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்தின் அனுபவத்தைப் புறந்தள்ளி விட்டு எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுக்கிறது.

பிரதமர் மோடிக்கும், அனில் அம்பானிக்கும் இடையிலான உறவையும் பிரான்சு அரசுத் தொலைக்காட்சி சுட்டிக் காட்டியுள்ளது. 2014 பொதுத்தேர்தலில் தனியார் நன்கொடையை அதிகம் பெற்ற கட்சி பாஜக-தான் என்றும், அம்பானி போன்றவர்கள் தான் பிரதமர் மோடியின் முதலாளித்துவ கூட்டாளிகள் என்றும் பிரான்ஸ் தொலைக்காட்சி சரியாக படம் பிடித்து காட்டியுள்ளது.

மேலும், 59 வயதான அனில் அம்பானி, தொலைத்தொடர்பு துறையில் ஓரளவு வெற்றி பெற்றவர் என்றாலும், விமான தொழிற் துறையில் அனுபவம் அற்றவர். அப்படியிருக்க ரபேல் ஒப்பந்தத்தில் அவரது நிறுவனம் இடம்பெறுகிறது என்றால், இந்தியாவின் இந்து தேசிய வாத பிரதமருடன் அனில் அம்பானிக்கு இருக்கும் நெருக்கம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்றும் பிரான்சு தொலைக்காட்சி உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளது.