ரபேல் ஒப்பந்தத்தில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் கூட்டு…..பிரான்ஸ் மீடியா சந்தேகம்

டில்லி:

இந்திய விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் பிரரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகளவு ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ தலைமையிலான எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது இந்த விவகாரத்தை பிரான்ஸ் பத்திரிக்கைகளும் புலன் விசாரணை நடத்தி வருகின்றன.

 

சமீபத்தில், பிரான்ஸ் 24 என்ற அரசு தொலைக்காட்சியில், ‘‘பிரான்ஸ் ரபேல் விமான ஒப்பந்தம் இந்தியாவில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

அதில், ‘‘ரபேல், தஸ்ஸால்ட், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை இந்திய ராணுவ துறையின் 800.7 கோடி டாலர் மதிப்பிலான திட்டங்களில் 50 சதவீதத்தை முதலீடு செய்கின்றன. ராணுவ தளவாட உற்பத்தியில் 75 ஆண்டுகள் அனுபவம் உள்ள இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்தின் அனுபவம் புறம் தள்ளப்பட்டு, பிரதமர் மோடி அறிவிப்புக்கு 13 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு குறித்தும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‘‘2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தனியார் நன்கொடையை பாஜக அதிகளவில் பெற்றது. அவர்கள் மோடியின் முதலாளித்துவ தோழர்கள்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘59 வயதாகும் தொழிலதிபரான அனில் அம்பானி தொலைத் தொடர்பு துறையில் சிறிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளார். ஆனால் விமான தொழிற்சாலையில் அவருக்கு அனுபவம் இல்லை. இந்தியாவின் இந்து தேசியவாத பிரதமருடன் இவருக்கு இருக்கும் இணக்கம் காரணமாக தான் இது நடந்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், முன்னாள் பாஜக உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை குற்றம்சாட்டியுள்ளனர். 1989ம் ஆண்டில் போபர்ஸ் ஊழல் காரணமாக ராஜீவ் காந்தி தலைமையிலான ஆட்சி வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது 2019ம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை பாஜக.வுக்கு ஏற்படும் என்று எதிர்கட்சிகள் நம்பிக் கொண்டிருக்கின்றன.