பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 12-வது முறையாக கோப்பை வென்ற ரபெல் நடால்

பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் தியமை தோற்கடித்து, ஸ்பெயினின் ரபெல் நடால் 12- வது முறையாக கோப்பை வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்-2’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை சந்தித்தார்.

இதற்கு முன், இத்தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைத்திலும் கோப்பை வென்ற நடால், எதிர்பார்த்ததுபோல, முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 5-7 என போராடி பறிகொடுத்தார்.

சரிவிலிருந்து மீண்டு மூன்றாவது செட்டில் அசத்திய நடால் 6-1 என கைப்பற்றினார். நான்காவது செட்டில் வென்றால் கோப்பை என்ற நிலையில், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் 6-1 என கைப்பற்றினார்.

மூன்று மணி நேரம் ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தான் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் தொடரில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் நடால் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இறுதிப் போட்டியில் முன்னேறிய 12 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதில் அசத்திய நடால் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் (ஆஸி.,-1, பிரெஞ்ச்-12, விம்பிள்டன்-2, யு.எஸ்., ஓபன்-3) 18-வது கோப்பை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20) உள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் ஒரே தொடரில் அதிக முறை கோப்பை (12, பிரெஞ்ச் ஓபன்) வென்றவர் என்ற சாதனை படைத்தார் நடால்.

இதற்கு முன், ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்ரெட், ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றதே அதிகமாக இருந்தது.

கோப்பை வென்ற நடாலுக்கு ரூ. 18 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில் நடந்த பார்சிலோனா ஓபன் அரையிறுதியில் நடால், டொமினிக் தியமிடம் வீழ்ந்தார். நேற்று அசத்திய நடால் இந்த தோல்வியை சரிகட்டினார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 18 crore prize, நடால்
-=-