சென்னை:

மிழகம் மின்மிகை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மீண்டும் தமிழகத்தில் இருண்ட காலம் திரும்புகிறதோ என்று பொதுமக்கள் அதிர்ச்சியுடன் விவாதிக்கிறார்கள்.

 

கடந்த 2013 , 2014ம் ஆண்டுகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப் பட்டிருந்தது. போதுமான அளவு மின்சாரம் சேமிக்க வழியில்லாமலும்,  காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டதாலும் தமிழக அரசு  மின்வெட்டை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளானார்கள்.

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் 2 மணி நேரமும் கிராமப்பகுதிகளில் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்ந்தது.. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள். தொழிற்நிறுவனங்களும் கடும் பாதிப்படைந்தது. பெரும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.

இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா  மின்வெட்டை அறவே போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டார். இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில்  மின்வெட்டு தவிர்க்கப்பட்டது. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்துறை அதிகாரிகள்  கூறி வந்தனர்.

இந்நிலையில், தற்போது கோடை காலம் வந்துள்ள நிலையில் தமிழகத்தின் மின்தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் சென்னை உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின்தடை காரணமாக சென்னை உள்ள பொதுமக்கள், தமிழகத்தில் மீண்டும் இருண்ட காலம் தொடங்கி விடுமோ என்றும், மின்மிகை மாநிலம் என்று தமிழக அமைச்சர்கள் கூறுவது ஏமாற்றுவேலையோ என்று விவாதித்து வருகின்னர்.

ஆனால், மின்வெட்டு, தடை குறித்து புகார் அளிக்கும்பட்சத்தில், தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக பதில் கூறி வருகின்றனர்.

தமிழகம் மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் மின்தடை பிரச்சினை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை.