பெங்களூரு:

ர்நாடக மாநிலம் உடுப்பி  மாவட்டத்தை  சேர்ந்தவர் பிரசாந்த் பசரூர். ஜெர்மனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் முனிச் நகரில் உள்ள தனது வீட்டில் மனைவி குழந்தையுடன் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் பிரசாந்த் மணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து இந்திய அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மறைந்த பிரசாந்த் குடும்பத்துக்கு அவரது நண்பர்கள் ரூ.22 லட்சம் நிதி வசூலித்து கொடுத்து உதவி புரிந்துள்ளனர். பிரசாந்தின் இறுதி சடங்குக்காக இந்த நிதி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த தம்பதிகள் பிரசாந்த், ஸ்மிதா. இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.  பிரசாந்த், ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 29ந்தேதி (மார்ச்-2019)  அன்று திடீரென அவர்களது வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் பிரசாந்தையும், அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

இந்த தாக்குதலில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர்,  கத்தியால் குத்திய நியூகினியா பகுதியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம்  கொலைக்கான காரணம் குறித்து ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசாந்த் மறைவால் அவரது மனைவி உள்பட அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்துக்கு ஆளாகி உள்ளனர். பிரசாந்தின் இறுதி சடங்குகாக அவரது  குடும்பத்துக்கு உதவி செய்ய அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து,  அவரது நண்பர்கள் Gofundme  என்ற பிரசாரத்தை கடந்த 1ந்தேதி தொடங்கினர். அதன்மூலம் சுமார் ரூ.20 லட்சம் திரட்ட முடிவு செய்தனர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தைவிட சுமார் 48 மணி நேரத்தில், ரூ.22 லட்சம் வசூலானது. 400 பேர் பிரசாந்துக்காக உதவி செய்துள்ளனர்.  இதன் மூலம் கிடைத்த 22 லட்சம் ரூபாய்  பணத்தை அவரது நண்பர்கள் பிரசாந்தின் இறுதிசடங்குக்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   இந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.