பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு, ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பாம்பு,உடும்பு, ஆமை உள்ளிட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பயணி ஒருவர் சந்தேகக்துக்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

அவரிடம் விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வு அமைப்பினர் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதனையடுத்து அவரது பைகளை சோதனையிட்டபோது, பாம்புகள்,உடும்புகள் மற்றும் ஆமைகள் உள்ளிட்ட அபூர்வ உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.

பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸில் இருந்து வந்திறங்கிய அவர் பெயர் முகமது அப்துல் மஜீத்(22) என்பதும் அவர் மாணவர் என்பதும் தெரியவந்தது.

9 பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து இவற்றை எடுத்துவந்துள்ளார். சாக்லெட்கள், பரிசுப் பொருட்களுடன் சேர்த்து பாம்பு, உடும்பு, எகிப்து ஆமைகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, வெளியில் நிற்கும் ஒருவரிடம் கொடுப்பதற்காக கொண்டுவந்ததாக தெரிவித்தார். அதிகாரிகளும் வெளியே வந்து சிறிதுநேரம் அவர் கூறிய நபரை கண்காணித்தனர். அப்படி யாரும் வரவில்லை.

வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடத்தி வரப்பட்ட உயிரினங்களை அடையாளம் கண்டனர்.
அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து வந்த கால்நடை மருத்துவர்கள், அவற்றை பரிசோதித்துவிட்டு, அனைத்தும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த உயிரினங்களை கொண்டு வந்தவருக்கு உரிமம் இல்லாததால், திரும்ப பாங்காக்கிற்கே அவற்றை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.