சேலம்:

சேலம் – சென்னை இடையே  முதல் விமான சேவையை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அரசின் உதான்  திட்டத்தின்படி  சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்  நாளை (25ந்தேதி) முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த விமான பயணத்திற்கு ரூ. 1700 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விமான பயண நேரம் 45 நிமி டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விமான சேவையை இயக்க  ‘ட்ரூஜெட்‘  எனப்படும் தனியார் விமான நிறுவனம் முன்வந்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஏலத்தின் அடிப்படையில் சமீபத்தில் 5 விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி காரணமாக  சேலம் விமான நிலையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வந்தடைகிறது.

பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு டில்லியில்  இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, சென்னையில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விமானம் காலை 9.20 மணிக்கு சேலம் வந்தடைகிறது.  இந்த விமானத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயணம் செய்கிறார்கள்.

பின்னர், சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

பின்னர் காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை புறப்படும் விமானம் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து இதே விமானம் கடப்பா வழியாக ஐதராபாத் புறப்பட்டு செல்கிறது.

சேலம் அருகே உள்ள  காமலாபுரம் விமான நிலையத்தில் இந தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்து வருகிறார்.

காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை காமலாபுரம் விமான நிலையத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விமான சேவைக்கு  பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில்,அடுத்தக்கட்டமாக  சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்  முடிவு செய்துள்ளது