சண்டிகர்: அதிக கொரோனா பலி எண்ணிக்கையில் இருந்து அதிக குணம் அடைந்தோரின் எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது பஞ்சாப் மாநிலம்.
கொரோனா பாதிப்பில் ஏப்ரல் மாதத்தில், பஞ்சாபின் இறப்பு விகிதம் 6 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியை விட இரு மடங்காகும். ஆனால் ஒரு மாதத்திற்குள், 2 சதவீதமாக குறைந்துள்ளது. மாநிலத்தின் மீட்பு வீதமும் 92 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அரசின் தரவுகளின்படி, பஞ்சாபில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை பஞ்சாபில் 40 ஆக இருக்கிறது. அருகிலுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பிற நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளிட்டவையே இதற்கு முன்னர் அதிக இறப்புக்கு காரணமாக இருந்தது என்று பஞ்சாப் சுகாதார இயக்குனர் அவ்னீத் கவுர் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: கொரோனா தடுப்பில் மாநிலம் ஏற்கனவே முன்னேறி உள்ளது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும்.
இங்கு வரும் ஒவ்வொரு நபரும் பரிசோதிக்கப்படுவார்கள். அறிகுறிகள் உள்ளவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
தற்போதைய புள்ளிவிவரப்படி மாநிலத்தில் பஞ்சாபில் மொத்தம் 2,060 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 1,898 பேர் குணம் பெற்றுவிட்டனர். மாநிலத்தில் 122  பேர் சிகிச்சையில் உள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முனைந்த போது, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டின.