டில்லி

டில்லியை மாநிலமாக அறிவிக்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளதால் அம்மாநில அரசுக்கு குறைந்த அளவில் அதிகாரம் உள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அத்துடன் இந்த அதிகார மோதலால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இடையே கடும் கருத்து மோதலும் உண்டாகி நீதிமன்ற வழக்கு வரையில் அது சென்றுள்ளது.

இந்நிலையில் டில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டில்லி மாநில முன்னேற்றத்துக்காக ஆம் ஆத்மி அரசு பல நல திட்டங்களை இயற்றி வருகிறது. ஆனால் அந்த திட்டங்கள் நிறைவேறாமல் மோடியின் பாஜக அரசு தடுத்து வருகிறது. நாட்டின் தலைநகரை முன்னேற்ற மத்திய அரசுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாமல் உள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நலத்திட்டங்கள் நிறைவேறுவதில் தடை இருப்பதில்லை. காரணம் அவை எல்லாம் மாநில அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் ஆகும். ஆனால் டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரங்கள் இல்லாமல் உள்ளது.

ஆகவே டில்லியை யூனியன் பிரதேசத்தில் இருந்து மாற்றி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நான் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். தற்போதைய நிலையில் டில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இதை தவிர வேறு நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.