யாழ்ப்பாணம்

சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது.

கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களின் விமானப் படைத் தேவைக்காக இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் விமானதளம் ஒன்று அமைக்கப்பட்டது.  இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து பலாலிக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரையொட்டி இந்தியாவில் இருந்து பலாலிக்கு விமானச் சேவை நிறுத்தப்பட்டது.  கடந்த 1990-ம் ஆண்டு இலங்கை ராணுவம் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வளையமாக அறிவித்ததால் அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 2009 ஆண்டு  இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.    அதன் பிறகு பலாலி விமானதளத்தை இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங் கியது. அதே நேரத்தில் பலாலியில் ராணுவத் தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் நிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன் வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடந்தன. ஆகையால் விமான தளத்தைப் புனரமைக்கும் பணி தாமதம் அடைந்தது

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட  மாகாணத்தின் வளர்ச்சிப் பணிக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை  துறைமுகத்தை மேம்படுத்து வதற்கும், பலாலி விமான தளத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கும் இந்தியா சுமார் ரூ.300 கோடி நிதி உதவி அளித்தது.

இலங்கை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கடந்த  ஜூலை மாதம் ஆறாம் தேதி பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.  இதில் முதற்கட்டமாக ஓடுபாதை 3,500 மீட்டர் நீளம் விரிவாக்கம் செய்யப்பட்டு தொடர்பு வசதிகளும், நிரந்தரமான முனையக் கட்டிடப் பணியும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்த பலாலி விமானதளம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இதன் தொடக்க விழா வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.  முதல் கட்டமாக இங்கிருந்து மதுரை, திருச்சி,  சென்னை, திருவனந்தபுரம், மும்பை , டில்லி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்குகிறது.