சிறையில் இருந்தபடியே கட்சிக்கு புத்துயிர் அளித்த லாலு பிரசாத் யாதவ்

ராஞ்சி

காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் புத்துயிர் அளித்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    தற்போது கட்சியை அவர் மகன் தேஜஸ்வி யாதவ் நிர்வகித்து வருகிறார்.    உடல்நலக் குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ்  ராஞ்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த ஜார்காண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே எம் எம்)ம்  காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.   இந்த கூட்டணியால் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது.  இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “தேர்தலுக்கு முன்பு நடந்த தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சில் எங்கள் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மிகவும் அதிருப்தியுடன் இருந்தார்.  குறைந்த எண்ணிக்கையில் அவர் போட்டியிட விரும்பவில்லை.   எனவே தனித்து அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தார்.   இதனால் அவர் கூட்டணிக் கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இதனால் எங்கள் கட்சித் தலைவர் லாலு பிரசாத்ஜி தனது மகனை அழைத்துப் பேசினார்.    தேஜஸ்வி தனது முடிவில் பிடிவாதமாக இருந்தால் அது எதிர்க்கட்சியினர் வாக்குகளைப் பிரிக்கும் என விளக்கினார்.   மேலும் அது பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்.  எனவே அவர் வலியுறுத்தலால் தேஜஸ்வி இந்தக் கூட்டணியில் இணைந்து பாஜகவைத் தோற்கடித்துள்ளார்.  இதன் மூலம் கட்சி புத்துயிர் பெற்றுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத்சிங்,”தேர்தல் கூட்டணி லாலுவின் ஆலோசனைப்படி உருவானது.  அவருடைய அரசியல் அனுபவம் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்து அதிகார வெறி கொண்ட பாஜகவை தோற்கடிக்க வைத்துள்ளது.   சரியான நேரத்தில் அவருடைய தலையீட்டால் தேஜஸ்வி யாதவ 7 தொகுதிகளில்  போட்டியிட ஒப்புக் கொண்டு இந்த கூட்டணியின் வெற்றிக்கு உதவி உள்ளார்” எனத் தெரித்துள்ளார்.