முறையான ஆவணங்கள் இன்றி சென்ற பங்களாதேஷ் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் சவுதி அரேபியா

ஹஜ்ரத்:

சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற பங்களாதேஷ் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.


பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நஸ்ருதீன் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தான் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

இதற்காக அவர் ரூ.3 லட்சம் வரை செலவு செய்தார். அவருக்கு ரியாத்தில் உள்ள சனம் இன்டர்னேஷனல் கம்பெனியில் வேலை இருப்பதாக அவரது ஏஜென்ட் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவரது ஏஜென்ட் தம்மாமுக்கு வேறு ஒரு கம்பெனிக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு இரண்டரை ஆண்டுகள்தான் வேலை பார்த்திருப்பார். போலீஸார் கைது செய்துள்ளனர்.
நஸ்ருதீனுக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அவரைப் போல பங்களாதேஷை சேர்ந்த 86 பேருக்கும் தற்போது இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

பலரும் 15 நாட்கள் வரை சிறை வைக்கப்பட்டு அவர்களது சொந்த நாடான பங்களாதேஷுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஹஜ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ” கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து 20 லட்சம் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிலிருந்து அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்றனர்.

ரியாத்தில் உள்ள பங்களாதேஷ் தூதரக துணைத் தலைவர் நஜ்ருல் இஸ்லாம் இது குறித்து கூறும்போது, “போதிய ஆவணங்கள் இல்லாமல் வரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் குறித்து ரெய்டு நடத்தி சவுதி அதிகாரிகள் கண்டறிகின்றனர்.
சிலருக்கு வேலை பார்க்க அனுமதி இருந்தாலும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில்லை. இது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
சவுதி அரேபியாவிலிருந்து பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் விவரம் எங்களிடம் இல்லை.

பல ஏஜென்ட்கள் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பங்களாதேஷ் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர்” என்றார்.

இலவச விசா என்ற பெயரில் யாரும் சவுதி அரேபியாவுக்கு வரவேண்டாம். சவுதி அரேபியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உள்ளூர் மக்களை பணி அமர்த்துவதற்கான புதிய கொள்கையை வகுத்துள்ளனர். அதனால்தான் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர்” என்கிறார் சவுதி அரேபியாவுக்கான பங்களாதேஷ் தூதர் கோலாம் மோஷி.