செப்டம்பர் 1 முதல் மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் அமல்: நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி

ரும் செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்  63 விதிகள் அமலுக்கு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின்  ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு அந்த திருத்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அந்த துறை இணைய தளம் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது அமைச்சர் நிதின் கட்கரி,”குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து வாகன சட்டத் திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. அதில் 63 விதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தும் சட்ட அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட அமைச்சகம் அதை மறு ஆய்வு செய்து வருகிறது. இன்னும் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் அந்தப் பணி முடிவடைந்து விடும்.

இந்த சட்டத்தின் 63 விதிகளும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பிரிவுகளில் மூலம் பல போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குடிபோதையில் வாகனம் செலுத்துவது, அதிக வேகம், அதிக சுமை உள்ளிட்டவற்றுக்கு அபராதம் அதிகம்  ஆக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.