இன்று முதல் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்குகிறது

சென்னை

ன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது

கில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டு 12,945 உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 8,84,199 பேர் குணமடைந்து 49,985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினசரி தமிழகத்தில் சுமார் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் இதை 2 லட்சமாக உயர்த்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.   அதையொட்டி இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கப்படுகிறது.  இன்னும் 3 நாளைக்கு இது நடைபெற உள்ளது.

ஏற்கனவே அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேலும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரத்து 900 மினி மருத்துவ விடுதிகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

இவற்றில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்குத் தினமும் தடுப்பூசி போட முடியும். இதனால் தடுப்பூசி திருவிழாவுக்கு எனத் தனியாக பிரத்தியேக மையங்கள் திறக்கப்படவில்லை.