இன்று முதல் அமல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபரதாதம்:

சென்னை:

மிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை தடைமீறி தயாரிப்போர் மற்றும் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கும் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இன்று முதல் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.  சிறிய கடைகள் என்றால் – ரூ.100, 200, 500. வீடுகளிலும் ரூ.500 முதல் 1000 வரை வசூலிக்கப்படும் என்றும், விற்பனையாளர்கள் முதல்முறை பிடிபட்டால் ரூ.25,000, 2வது- ரூ.50,000, 3வது- ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 4வது முறை பிடிபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.

பிளாஸ்டிக் விற்பது மற்றும் பயன்படுத்துவதை கண்காணிக்க  சென்னையில் 200 வார்டுகளுக்கும் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பனை செய்வதற்கும் அரசு தடை விதித்தது.

இதையடுத்து சாலையோர உணவகங்கள், உணவுவிடுதிகளில் பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு குறையத் தொடங்கியது. பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் வீட்டில் இருந்தே அதற்கான பைகளை எடுத்துச் சென்று வந்தனர். இதனிடையே பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் போதியளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதி கரிக்க தொடங்கியது. பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில், பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, இன்று திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதாவது, பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூ.50 ஆயிரமும், மூன்றாவது முறை பிடிப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கவும், நான்காவது முறையாக பிடிபட்டால் விற்பவரின் கடை உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற மாநகராட்சி பகுதிகளிலும், மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.