நாளை முதல் தமிழக ஆர் டி ஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை

துரை

நாளை முதல் தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்துச் சேவைகளுக்கும் பணமில்லா பரிவர்த்தனை முறை அமுலுக்கு வர உள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற மட்டுமின்றி ஆர் சி புத்தகத்தில் பெயர் மாற்றம்,  புத்தக நகல் பெறுதல் உள்ளிட்ட பல சேவைகளுக்காக மக்கள் கூட்டம் அதிகம் வருகிறது.    இங்கு பெருமளவில் பண பரிவர்த்தனை நடைபெறுவதால் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதை ஒட்டி பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சில சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்ப்பட்டது.  இந்நிலையில் நேற்று மதுரை நகரில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  அந்த கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள்,  வாகன உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில், “நாளை அதாவது ஜனவரி 1 முதல்  போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். பின்னர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான ஒப்புகைச் சீட்டுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி எளிதில் சேவையைப் பெறலாம்” என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னர், மேக்ஸிகேப் உரிமையாளர்கள் சங்கத்தினர், சுற்றுலா பேருந்து, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.