புதுச்சேரி

நாளை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் முழு நேரம் இயங்க உள்ளன.

சென்ற வருடம் மார்ச் மாத இறுதியில் நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.  அதன்பிறகு ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் மூடல் தொடர்ந்தது.   மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலைமைக்கு ஏற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகையில் வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.   கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.   இதில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் 1,3,5,7 வகுப்புக்களுக்குத் திங்கள், புதன் வெள்ளிக்கிழமைகளிலும் 2,4,6, மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் வகுப்புக்கள் நடக்கின்றன.

நேற்று புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, ”புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் 3-ம் தேதி முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12-ம் வகுப்புகள் அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்” என அறிவித்துள்ளார்.