கொரோனா : இன்று இரவு முதல் மகாராஷ்டிராவில் அனைத்து பணி இடங்களும் மூடல்

மும்பை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து பணி இடங்களும் இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி உள்ளது.  இந்த பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதில் மகாராஷ்டிர மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவில் இன்று இரவு 12 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து பணியகங்களும் மூடப்படுகின்றன.

இதில் மும்பை, மும்பை புறநகர்ப் பகுதி, புனே, பிம்ப்ரி, சிங்க்வாட், மற்றும் நாக்பூர் போன்ற பெரு நகரங்களும் அடங்கும்.  அனைத்து அரசு அலுவலகங்களும் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை  25% ஊழியர்களுடன் மட்டும் இயங்கும்,” எனக் கூறப்பட்டுள்ளது.