Random image

பொதுமக்கள் அதிருப்தி: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்தியஅரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்த உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணையின் சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்றும் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 36 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதேபோல டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையாகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89 ரூபாயாகவும், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81 ரூபாய் 63 காசுகளாகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மாநில அரசு விதிக்கும் வாட் வரி காரணமாக விலை உயர்வதாக கூறப்படுகிறது.  டில்லி மாநில அரசின் வரி குறைவு காரணமாக மற்ற மாநிலங்களை விட அங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே அதிவிலை விற்கப்படும் மாநிலங்களில் மும்பை முதலிடத்தை பெற்றுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், மத்திய அரசாங்கத்தின் “பொருளாதார கொள்கை முடிவு” என்று நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.