தலைமறைவு பொருளாதார குற்றவாளி மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

டில்லி:

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் மோசடி ஆசாமிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட மசோ லோக்சபாவில் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது இன்று விவாதம் நடந்தது. காங்கிரஸ் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதா நிறைவேறியது. மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட பின் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இந்த புதிய சட்ட மசோதாவின் படி வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும், அல்லது விசாரணைக்காக நாடு திரும்ப மறுக்கும் நபர்களை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

இத்தகைய நபர்களை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து அவருடைய சொத்துகளை 2 ஆண்டுக்குள் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் தரப்பு எதிர்மனு தாக்கல் செய்வது தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.