ஜுன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை :

சென்னை உள்பட முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகள் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு, ஜுலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக, 5 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேலும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக ரேஷன் கடை பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில், விலையில்லா பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்களை பெறுவதற்கான கால அவகாசம் ஜுலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.