சென்னையில் முழு ஊரடங்கு என்பது வதந்தி… ராதாகிருஷ்ணன் விளக்கம்…

சென்னை:

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியாகும் செய்திகள் வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்புஅதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. குறிப்பிக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் 34,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 18,325 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி  ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.  இதன் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி கொரோனா பரவலை தடுக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என  தெரிவித்துள்ளார்