சென்னை: 
சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

காவல் துறை நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்.சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 19ம் தேதி முதல், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின், மதுரை, தேனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, மதியம் வரை செயல்படலாம் என்பது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, அப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.காய்கறி, மளிகை கடை என, எந்த கடைகளும் திறந்திருக்காது; வாகனங்கள் எதுவும் இயங்காது.

தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அரசு உத்தரவை மீறி, வெளியில் வருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு தெரிவித்து உள்ளது.