புதுச்சேரியிலும் 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்! மாநிலஅரசுக்கு 12 இயக்கங்கள் கூட்டாக கோரிக்கை

புதுச்சேரி:

புதுச்சேரியிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் 15 நாட்கள் முழு ஊரடங்கைநடைமுறைப்படுத்த வேண்டும் என புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்பட  12 இயக்கங்கள் இணைந்து, மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன-

இதுதொடர்பாக 12 இயக்கங்கள் சார்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்  கூறியிருப்பதாவது,
மக்கள் தொகை அடர்த்தியாகக் கொண்ட புதுச்சேரியில், ஆரம்பக் கட்டத்தைவிட கொரோனா தொற்று தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரும் அச்சத்தையும், பீதியையும், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 23ந்தேதி  ஊரடங்குத் தொடக்கத்தில், நோயின் அறிகுறி தென்படாத நிலையில், மிகவும் கண்டிப்புடன் செயல்பட்ட புதுச்சேரி அரசு, இன்றையச் சூழலில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டது. இதனால், நோய்த் தொற்று 194 பேரை தொட்டுவிட்டது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகரமே இன்று மிகப் பெரும் அபாயக் கட்டத்தில் இருப்பதைப் புதுச்சேரி அரசு உணர வேண்டும். அதேபோல், மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள சிறிய நகரமான புதுச்சேரி நோய்த் தொற்றின் மிகவும் அபாயகரமானக் கட்டத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஏற்கனவே, அகில இந்திய அளவில் சர்க்கரை நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் அதிகம் உள்ள பகுதியாகப் புதுச்சேரி உள்ளது. இத்தகைய சூழலில் கொரோனா தொற்று இவர்களையும் முதியவர்களையும் கடுமையாகத் தாக்கும் ஆபத்துள்ளது.
புதுச்சேரி மக்கள் நலன் கருதி அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 7,500 வழங்க வேண்டும்.

அதேபோல் நோய்த் தொற்றைப் பரிசோதிக்க மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளைப் பயன்படுத்த ஏதுவாக அவசர உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் எதிர்வரும் சில நாட்களில் போர்க்கால அடிப்படையில் செய்து முடித்துவிட்டு, புதுச்சேரியில் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மிக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் வெகுவாக குறைத்து மக்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, புதுச்சேரி அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் விரைவாக நிவாரணம் வழங்கி, அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வதன் மூலம் புதுச்சேரியை கொரோனோ தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாக்க முடியும் என சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.