முழு ஊரடங்கு வதந்தி: சென்னையில் இருந்து வெளியேறும் மக்கள்… திருப்பி அனுப்பப்படும் சோகம் ..

சென்னை:
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வதந்திகள் பரவி வருவதால், ஏராளமானோர் சென்னையிருந்து தங்களது சொந்த ஊர்களை நோக்கி வெளியே முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை செங்கல்பட்டு சோதனைச் சாவடியில் மடக்கும் காவல்துறையினர் மீண்டும் சென்னைக்கே திருப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், சென்னையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால்,  வெளி மாவட்டங்களில் இருந்தோ,  சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கோ செல்ல இ.பாஸ் வழங்கப்படுவது கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநில தலைநகர் சென்னை தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் கட்டுபாடின்றி சுற்றித்திரிவதால், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது.  ஜூன் 1ந்தேதி முதல்  சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  360 தெருக்கள் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், அரசின் விதிகளை மதிக்காமல் பலர் சுற்றித் திரிவதால் தொற்று பரவல் மேலும்  மேலும் அதிகமாகி வருகிறது.  மக்கள் நெருக்கம் உள்ள வடசென்னை பகுதிகளில் பல லட்சம் பேருக்குத் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களை தெரிவித்து இ-பாஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின்  பல மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சமீப காலமாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், சென்னையில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மாவட்ட நிர்வாகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து,  சென்னையிலிருந்து யார் எந்தக் காரணத்திற்காக, சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டி விண்ணப்பித்தாலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்து விடுகின்றன. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்களுக்கே அனுமதி வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. உறுதியான இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை என்றால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களும் செங்கல்பட்டு சோதனைச் சாவடியில் மீண்டும் ஒருமுறை சோதனை செய்யப்பட்டே அனுப்பப்படுகின்றனர்.
அதுபோல சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களும் செங்கல்பட்டு சோதனைச் சாவடியில், கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.. இருச்சக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றின் மூலம் வருபவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து யாரும்  வெளியில் வர முடியாமல், நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் மேலும் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல் பரவியதால், அச்சமடைந்த சிலர், தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு  மீண்டும்  படையெடுத்தனர். இந்நிலையில், சென்னையிலிருந்து வெளியேறுபவர்களை தடுப்பதற்காக செங்கல்பட்டு அருகே, பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் வரும் அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் சென்னைக்கே அனுப்பி வைக்கின்றனர். டுத்த சில நாட்களுக்கு சோதனை தொடரும் என்று செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன்  தெரிவித்து உள்ளார். தினசரி 8ஆயிரம் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்

இ பாஸ் இல்லாமல் வரும் அனைத்து வாகனங்களையும் மீண்டும் சென்னைக்குள் திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். தற்போது சென்னையில் உள்ள மக்களுக்கு இ பாஸ் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. பெரும்பாலானோர் சென்னையில் வசிப்போர் தென்மாவட்டங்களை சார்ந்தோர் என்பதால் இருக்கசக்கர வாகனத்தில் 2 அல்லது 3 பேர் இ பாஸ் இல்லாமல் செல்கின்றனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அங்கு  அவ்வப்போத வாக்குவாதங்கள் ஏற்பட்டு பரபரப்பு நிலவி வருகிறது.

கார்ட்டூன் கேலரி