தெலுங்கானாவில் முழுமாத ஊதியமும் ஊக்கத்தொகையும் யாருக்கு..?

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியப் பங்கை ஆற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முழுமாத ஊதியமும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், வேலை இல்லாத நாட்களில் ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், இந்த அறிவுறுத்தலை மீறி, வேலை இல்லாத நாட்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தெலுங்கானா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடம் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க போராடும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு மாத சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.