மும்பை

துபாய்க்கு கிளம்பிய விமானத்தை தடுத்து நிறுத்தி இறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் தனது அனைத்து சேவைகளையும் நிறுத்தி உள்ளது.   இந்த நிறுவனம் கடன், மற்றும்  பாக்கிகளுக்காக ரூ.20000 கோடி தர வேண்டி உள்ளது.  அத்துடன் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் வருமான வரி ஆகியவற்றையும் நிர்வாகம் செலுத்தாமல் வைத்துள்ளது.

நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்களில் அதிகம் கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கியின் கீழ்  அனைவரும் ஒருங்கிணைந்து பாக்கியை வசூல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிறுவன அமைப்பாளரும் தலைவருமான நரேஷ் கோயல் பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவுக்கிணங்க பதவி விலகினார்.

நேற்று முன் தினம் நரேஷ் கோயல், மற்றும் அவர் மனைவியும் ஜெட் ஏர்வேஸ் இயக்குனர்களில் ஒருவருமான அனிதா கோயல் ஆகிய இருவரும் மும்பையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல இருந்தனர்.   அவர்கள் சென்ற விமானம் கிளம்பிய ஓரிரு நொடிகளில் திரும்ப வரவழைக்கப்பட்டு இருவரும் இறக்கி விடப்பட்டனர்.   அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “ஜெட் ஏர்வேஸ் நிதி விவகாரத்தில் பல மோசடிகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.   இந்த நிறுவனத்தின் நிதி வேறொரு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.     இதனால் கடனை திருப்பி தர இயலாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பதால் அதை கண்டறிவதற்கு முன்பு நரேஷ் கோயல் தப்பி ஓட முயற்சித்திருக்கலாம்  எனவும் ஐயம் உள்ளது.

இது குறித்து காவல்துறை எழுத்து பூர்வமாக விமானத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.   ஆயினும் கோயல் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரும் பாஸ்போர்ட்டில் வேறு ஸ்பெல்லிங் வைத்திருந்ததால் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதன் பிறகு விவரம் அறிந்து உடனடியாக விமானத்தை வரவழைத்து இறக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் விசாரணை வளையத்துக்குள் இருப்பதை தெரிந்துக் கொண்டே வெளிநாடு பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.   இது குறித்து டில்லியில் இருந்து வந்துள்ள் அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளன்ர்” என தெரிவித்தார்.