பி.எம்.கேர்ஸ் நிதியை பேரிடர் நிதியில் சேர்க்க முடியாது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை பேரிடர் நிவாரண நிதியுடன் சேர்க்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கொரோனா தொற்று மற்றும் அதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, கடந்த மார்ச் 28ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்டது. கொரோனா , தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைக்காக  இந்த  நிவாரண நிதியம் உருவாக்கப்பட்டது.  இதில் கோடிக்கணக்கில் நிதி குவிந்தது.

இதுதொடர்பாக தகவல் உரிமை சட்டப்படி, சமூக நல ஆர்வலர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி  என்பவர் பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து தகவல் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம், இது  ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து,  சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தை யும் தேசிய பேரிடர் நிதிக்குகமாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது, மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் விசாரணைகளைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில்,  பி.எம்.கேர்ஸ் நிதிக்கான பங்களிப்புகள் தன்னார்வமானவை. அதனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியால் சேகரிக்கப்பட்ட நிதி முற்றிலும் வேறுபட்டது. இந்த நிதிகள் தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் ஆகும். தனிநபர்களும் நிறுவனங்களும் தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்கு தாங்களாக முன்வந்து பங்களிப்பு செய்ய எவ்வித தடையும் இல்லை.

பி.எம் கேர்ஸ் நிதியில் சேகரிக்கப்பட்ட நிதி அறக்கட்டளைக்குரியது என்பதைக் உறுதிப்படுத்தி உள்ளோம். ஆகவே கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக புதிய தேசிய பேரிடர் திட்டம் ஏதும் தேவையில்லை.

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.