28 டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிதியுதவி நிறுத்தம்

டில்லி:

கடந்த 10 ஆண்டுகளாக நிர்வாக குழுவை தேர்வு செய்யாத காரணத்தால் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 28 கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை டெல்லி துணை முதல்வரும், கல்வி துறை பொறுப்பு வகிப்பவருமான மனிஷா சிசோடியா சமூக வளை தளத்தில் இந்த வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ தனது கட்டுப்பாட்டில் உள்ள 28 கல்லூரிகளுக்கு கடந்த 10 மாதங்களாக நிர்வாக குழுவை அமைக்க டெல்லி பல்லைக்கழகம் முன் வரவில்லை. இதனால் இப் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி அளிப்பதை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘நிர்வாக குழு இல்லாமல் எப்படி கல்வி நிறுவனங்கள் கடந்த 10 மாதங்களாக செயல்படுகிறது. கல்வி என்ற பெயரில் டில்லி அரசின் நிதி தவறாக பயன்படுத்துவது, ஊழல் நடப்பதற்கு நான் அனுமதிக்க முடியாது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் செயல்படுவதற்கான ஒவ்வொரு முடிவையும் நிர்வாக குழு தான் இறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு சுயநிதி கல்லூரியும் ஆண்டிற்கு ரூ. 20 முதல் ரூ. 22 கோடி வரை நிதிகளை 4 தவணைகளில் பெறுகின்றன.

ஜூலை, நவம்பர், ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களின் இந்த நிதியுதவி பெறப்படுகிறது. 28 கல்லூரிகளில் 12 கல்லூரிகள் முழுவதும் டெல்லி அரசின் நிதியுதவியுடன் செயல்படுகின்றன. மீதமுள்ள 17 கல்லூரிகள் 5 சதவீத மானியத்தை மட்டுமே பெறுகின்றன.

தீன் தயாள் உபத்யாயா கல்லூரி, மகராஜா அகர்சன் கல்லூரி, சாகித் சுக்தேவ் பிஸ்னஸ் கல்லூரி மற்றும் பகினி நிவேதா கல்லூரி ஆகியவை முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளாகும். கடந்த செப்டம்பர் 2016 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 11 கடிதங்கள் டெல்லி அரசு சார்பில் கல்வி துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர்கள் நியமனம் நடப்பதற்குள் நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நிர்வாக குழுவை அமைக்க தேவையான நடவடி க்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி பல்கலைக்கழகம் சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. நிர்வாக குழு அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் மாநில அரசுக்கு ஏற்கனவே உத்தரவாத கடிதங்கள் அனுப்பப்ட்டுள்ளது.

நிர்வாக குழுவு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான மாநில அரசின் பெயர் பரிந்துரைகளை டெல்லி பல்கலைக்கழக செயற்குழு நிராகரித்துள்ளது. கல்வியாளர்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுனர்கள் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்’’ என்று செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ஜா தெரிவித்தார்.

‘‘டெல்லி அரசின் இந்த நடவடிக்கையால் முழு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் கல்லூரிகள் அதிகளவில் பாதிக்கப்படும். ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம் செலுத்துதல் போன்றவை பாதிக்கும்’’ என்று தீன் தயாள் உப்தயாயா கல்லூரி முதல்வர் கார்க் தெரிவித்தார்.

‘‘டெல்லி அரசின் இந்த அறிவிப்பால் இப்போதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதிர்காலத்தில் இதன் பாதிப்பு வெகுவாக இருக்கும். எனினும் எங்களது கல்லூரி முதல் தவணை நிதியுதவியை பெற்றுவிட்டது’’ என்று மகாராஜா அக்ரசன் கல்லூரி அலுவலர்கள் தெரிவித்தனர்.