கேரளாவில் பரபரப்பு: என்ஆர்ஐ கடத்த முயன்ற பா.ஜ.க தலைவர் கைது!

மலப்புரம்,

கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும்  வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த  முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார்  கைது செய்யப்பட்டனர்.

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் வசித்து வருபவர் தொழிலதிபர் ரபீயுல்லா. இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ( 24 ம் தேதி) இவரது  வீட்டுக்குள்  ஒரு கும்பல் நுழைந்து, காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனர்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த தொழிலதிபரை கடத்த முயற்சி செய்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்த கும்பலை சேர்ந்த ஒருசிலர் கேட்டுக்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தனர்.

வீட்டினுள் எழுந்த சந்தம் கேட்டு, வாசலில் நின்றிருந்தவர்களிடம் அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அவர்களின் பதில் முரணாக இருந்தால், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோழிக்கோடு மற்றும் கண்ணூர் பகுதி போலீசார் தொழிலதிபர் ரபீயுல்லா-வை கடத்த  முயன்றவர்களை கூண்டோடு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் முக்கிய குற்றவாளி,  பாரதியஜனதா கட்சியின்  சிறுபான்மை மோர்ச்சா தேசிய துணைத் தலைவர் அஸ்லாம் குறிக்கல் என்றும் அவருக்கு உதவியாக  கேசவ மூர்த்தி, ரியாஸ், அர்ஷத், உஸ்மான், ரமேஷ் மற்றும் சுனிலை ஆகியோரையும், கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் போலீஸ் என்றும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் உட்பட 7 பேர் மீதும் கேரள போலீசார்  சட்ட விரோதமாக வீட்டிற்குள் நுழைந்தது , ஆள் கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் ஒருவரை பாரதியஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடத்த முயற்சி செய்தது மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.