வுண்ட் வியூ, கலிபோர்னியா

கூகுளின் ஈ மெயிலான ஜி மெயிலில் பல புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் அறிமுகத்துக்குப் பின் பலரும் அவற்றை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.     இதனால் ஈ மெயில் சேவை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது எனவே கூறலாம்.   ஆனால் கடந்த அமெரிக்க்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் போன்ற சமூக வலை தளங்களில் தகவல்கள் திருடப்பட்ட பின்பு பலரும் ஈ மெயில் சேவைக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கூகுளின் ஈ மெயில் சேவையான ஜி மெயிலில் தங்கள் வாடிக்கையாளர்களை கவர பல  புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.    இந்த புதிய வசதிகளின் மூலம் நாம் அனுப்பும் தகவல்கள்  பிற்காலத்தில் திருடப்படுமோ என அஞ்சத் தேவை இல்லை என கூறப்படுகிறது.

புதிய வசதிகள் மூலம் இந்த தகவல்களின் காலக் கெடுவை 1 நாளில் இருந்து 5 வருடங்கள் வரையாக அமைக்க முடியும்.   அந்தக் காலக் கெடு முடிந்ததும் அந்த தகவல் தானாகவே மறைந்து விடும்.   அது அனுப்பியவரின் கணக்கில் மட்டும் இன்றி பெறுபவர் கணக்கில் இருந்தும் அந்தக் காலக் கெடு முடிந்ததும் மறைந்துவிடும்.   அத்துடன் அதில் உள்ள பாதுகாப்பு வசதியினால் பெறுபவர் அதை மற்றவருக்கு அனுப்பவோ, காப்பி செய்யவோ மற்றும் பிரிண்ட் செய்யவோ இயலாது.

அத்துடன் வேறு யாரும் நாம் அனுப்பும் தகவல்களை படிக்க முடியாதபடி கடவுச் சொல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கடவுச் சொல் எஸ் எம் எஸ் மூலம்  தகவல் பெறுவோருக்கு அனுப்பப் படும்.  அந்தக் கடவுச் சொல் இல்லாமல் செய்தியை திறந்து படிக்க முடியாது.   இந்த வசதிகள் ஜி மெயிலில் இருந்து அனுப்பப்படும் மற்ற மெயில்களுக்கும் பொருந்தும்.

அத்துடன் மெயில் மூலம் அனுப்பப்படும் வைரஸ்கள் போன்றவற்றை அதை திறக்காமலே கண்டறியும் தொழில்நுட்பமும் தற்போது ஜி மெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.   இதனால் ஜி மெயில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரும் தகவலை அதைப் படிக்காமலேயே எச்சரிக்கை வழங்க உள்ளது.